Tuesday, April 18, 2006

கோனாபட்டிலிருந்து கோவிலூர் வரை

எங்க ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்குப் போறதுங்கறது ஒரு பெரிய வேலை. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் தான் அரசுப் பேருந்து எட்டிப் பாக்கும். அவங்களச் சொல்லியும் குத்தமில்லே. ஊருல இருக்க ஆட்கள் குறைவு தானே.


நம்ம வீடு

எங்க பெரியப்பா பேருந்து வர நேரத்த பத்து நிமிஷம் கம்மியா சொல்வாரு. அது போதாதுன்னு வீட்டுக் கடிகாரத்த ஒரு பத்து நிமிஷம் கூட்டி வச்சிருவாரு. அரசுப் பேருந்து பத்து நிமிஷம் தாமதமாத் தான் வரும். நம்ம போய் அரை மணி நேரம் முத்தையாண்ணே பொட்டிக் கடைலே வேடிக்கை பாத்துகிட்டு இருக்க வேண்டியது தான்.

நம்ம வீட்டுக் கொல்லைப்புறம்

இந்த தரம் அதுக்கு மேல சோதனை. கோட்டையூர் பக்கம் தார் ரோடு போடறதுனால காரைக்குடி அஞ்சாம் நம்பர் வராது, திருமயம் போய் சுத்தி தான் போகணும்னு ஒரு தகவல். என்னடா செய்யறது, பேசாம் வீட்டுக்குத் திரும்பிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கப்ப, திடீர்னு சிறுவயல் வழியா காரைக்குடி போற வண்டி வந்து நின்னுச்சு. நம்ம ஊர்ல ஏன் எதுக்குனெல்லாம் கேள்வி கேக்கக் கூடாது, வண்டி வந்தா ஏறிடணும்.

போற வழில ஆத்தங்குடிக்கும் சிறுவயலுக்கும் இடையிலே பொட்டல் காட்டுல கிரிக்கெட்டு. என்னத்த சொல்ல. ஹாக்கி தான் இந்தியாவோட தேசிய விளையாட்டுன்னு இன்னும் பொய் சொல்றத விட்டுட்டு கிரிக்கெட்டு தான்னு உண்மைய சொல்லலாம்.

இந்த யோசனையிலேயே காரைக்குடி பழைய பேருந்து நிலையத்துக்கு போய் சேந்தாச்சு. இறங்கி கோவிலூர் போறதுக்கு வண்டி தேடினா, ஒண்ணையும் காணோம். சுத்தி முத்தி பாத்தா, கோனாபட்டிலேந்து நான் வந்த வண்டியே போர்டு மாத்தி பிள்ளையார்பட்டி, வழி கோவிலூர்னு நிக்குது. ஓடிப் போய் ஏறுனா, நடத்துனருக்கு நம்மளப் பாத்து சிரிப்பு. "ஏண்ணே, முன்னாடியே கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்ல" அனுசரனையாக் கேள்வி வேற. எனக்கு எப்படியா தெரியும் ஒரு வண்டிய வச்சு உலகத்தையே சுத்துவீங்கன்னு புலம்பிக்கிட்டு ஏறி உக்காந்தேன்.

கோவிலூர் காரைக்குடியிலேருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில இருக்கு. சாலையில இருந்து பாத்தாலே கோபுரம் தெரியும்.


முதல்ல இருக்கிறது இந்த ஊரணி. யாரும் பயன்படுத்தாத மாதிரி இருக்கு. அந்த மூலையிலே பாருங்க ஒரு மண்டபம். அந்தக் காலத்துல துணி மாத்த மறைவிடமா பயன்படுத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். பக்கத்துல போய் பாத்தா வாச்ல்ல ஒரு செத்த பாம்பு. நமக்கு பயமில்ல, இருந்தாலும் வந்த வேலையப் பாப்போம்னு நேர மடத்துக்குப் போயிட்டேன்.


கோவிலூர் மடம் மூலமா நிறைய சமுதாய சேவைகள் செய்யறாங்க. அங்க ஒரு திருமுறைக் கல்லூரி (திருவாசகம்லாம் சொல்லித் தருவாங்க), சிற்பக் கல்லூரி, இசைக் கல்லூரி எல்லாம் இருக்கு.


கோவில்ல உள்ள சிற்பங்கள் ஒவ்வொண்ணும் அற்புதமா இருக்கு. ஆனா புகைப்படம் எடுக்க அனுமதியில்ல. அதனால சுத்தி வந்து கோபுரத்தையும், மதில் சுவரு மேல இருக்க நந்தியையும், ஊரணி மத்தியில இருக்க மண்டபத்தையும் மட்டும் படமெடுத்தேன்.

ஒரு யானை


ஒரு யானைப் பாகன்


எல்லாம் முடிச்சுட்டு காரைக்குடி அன்னபூர்ணால சில்லி புரோட்டாவ கொத்திக்கிட்டிருந்தப்ப நம்ம ஆச்சி கிட்டேருந்து கைத் தொலைபேசியிலே அழைப்பு. "ஏங்க, நானும் அத்தையும் கைத்தறி சேல எடுக்கலாம்னு வந்தோம், நீங்க எங்க இருக்கீங்க". ஆட்டோல ஏறி நெசவாளர் குடியிருப்புக்குப் பயணம்.

ஞாயித்துக் கிழமையானதால் கடை மூடியிருந்துச்சு. நம்ம ஆச்சி விட்டுருவாங்களா, தறி ஓட்றவங்க வீடு பக்கத்துல தான்னு கேட்டுகிட்டுல்ல வந்தாங்க. வீட்டுக்கே போய் அந்த கடைப் பொண்ணுங்கள அழைச்சுட்டு வந்து சேல, சுடிதார்னு எடுத்தப்புறம் தான் திருப்தி.

எங்க அம்மா சேலை பாக்குற அழகு

திரும்பிப் போற வழில என்னோட கோவிலூர் அனுபவத்தக் கேட்டுட்டு, "சரி, வாங்க இன்னொரு தரம் போவோம்"னு திடீர் முடிவு எடுத்தாங்க.

மணி 2.30. மத்தியானம் கோவில் நட சாத்தியிருந்துச்சு. ஊரணிக் கரைலெ, சிலு சிலுனு காத்து. மெல்ல அசையும் தென்ன மரம், வேற எந்த சத்தமுமில்லாத இடத்தில, எனக்குன்னு வாசிக்காம தனக்காக வாசிக்கும் இசைக் கல்லூரி மாணவனோட நாதஸ்வர இசை - வாழ்க்கையிலே ரசனையான தருணங்கள்ள ஒண்ணு அது.